×

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு; கடமான்களுக்கு ஸ்பிரிங் லிங்க் வாட்டர் குளியல்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர். கடமான்களுக்கு ஸ்பிரிங் லிங்க் வாட்டர் குளியலும், புள்ளிமான், குரங்குகளுக்கு தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவில் புள்ளிமான், கடமான், குரங்கு, முயல், முதலை, மலைப்பாம்பு, பல்வகை நாரைகள், வெள்ளை மயில், வண்ணப்பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டு முழுவதும் சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை இருக்கிறது. ஏற்காடு மலைக்கு செல்லும் வெளியூர் சுற்றுலாவாசிகளும், குரும்பப்பட்டி உயிரியியல் பூங்காவிற்கு வந்து விலங்குகளை பார்த்துச் செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இப்பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, 2ம் நிலை வன உயிரியியல் பூங்காவாக தரம் உயர்த்தி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, இருக்கும் விலங்குகளையும், பறவைகளையும் நல்ல முறையில் பராமரிக்க வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதிலும் பள்ளி வகுப்புகள் முடிவதால், கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், பூங்காவை அலகுப்படுத்தி வைத்துள்ளனர். பூங்கா வளாகத்திற்குள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் சிலைகளுக்கு புதிதாக பெயிண்ட் அடித்துள்ளனர். மக்கள் நடந்துச் செல்லும் பூங்கா உள்வட்ட பாதையில் 5 இடங்களில் சிங்கம், புலி, யானை, வண்ணத்துப்பூச்சி, படகு போன்ற 3டி ஓவியம் தீட்டியுள்ளனர். அந்த ஓவியங்களை தொட்டப்படியும், அதன்மீது நின்றும் சுற்றுலா பயணிகள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

கோடை வெயில் தொடங்கியிருப்பதால், விலங்குகளை பராமரிப்பதில் அதிக கவனத்தை வனத்துறையினர் செலுத்தியுள்ளனர். பூங்கா வனச்சரகர் உமாபதி தலைமையிலான வன ஊழியர்கள், விலங்குகளுக்கு குளுமையூட்டும் வகையில் தண்ணீரை பீய்ச்சியடித்து வருகின்றனர். இதில், 24 கடமான்களும் மகிழ்ச்சியாக இருக்க ஸ்பிரிங் லிங்க் வாட்டர் சப்ளை மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிப்பாட்டுகின்றனர். ஸ்பிரிங் லிங்க் வாட்டர் சப்ளையை வழங்கியதும், கடமான் வந்து அந்த தண்ணீரில் நின்று ஆனந்தம் கொள்கிறது. பின்னர், அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் இறங்கி குளியல் போடுகின்றன.

இதேபோல், புள்ளிமான்களுக்கும், குரங்குகளுக்கும் கோடை வெப்பத்தை குறைக்க தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி போன்றவற்றை வன ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், விலங்குகளுக்கு உணவுகளை கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், எப்போதும் ஊழியர்கள் ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கின்றனர். குளிர்ச்சியான உணவும், சத்தான உணவும் விலங்குகளுக்கு உரிய நேரங்களில் வனத்துறையினர் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆங்காங்கே அமர இருக்கைகளும், குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளனர். பூங்கா வளாகத்திற்குள்ளும், வெளியேயும் கழிவறை வசதி இருக்கிறது. தற்போது, கோடை விடுமுறை துவங்கியிருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் கல்வி சுற்றுலாவாக பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்து வருகின்றனர். அக்குழந்தைகள், பூங்காவை சுற்றுவந்து விலங்குகளை பார்த்து மகிழ்கின்றனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குரும்பப்பட்டி உயிரியியல் பூங்காவை நல்ல முறையில் பராமரித்து வைத்துள்ளோம். இதனால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வாரத்திற்கு 6 நாட்கள் (செவ்வாய் தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படும். அந்த நேரத்தில் மக்கள் பூங்காவிற்கு வரலாம். கோடை வெப்பம் அதிகரித்திருப்பதால், புள்ளிமான், கடமான், குரங்கு உள்ளிட்ட அனைத்து வகை விலங்குகளுக்கும் குளிர்ச்சி தரும் உணவுகளையும், சத்தான ஆகாரங்களையும் கொடுத்து வருகிறோம்,’ என்றனர்.

The post சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு; கடமான்களுக்கு ஸ்பிரிங் லிங்க் வாட்டர் குளியல் appeared first on Dinakaran.

Tags : Salem Kurumbatti ,Zoo ,Salem ,Salem Kurumbatti Zoo ,Spring ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை